தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, நெற்பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரவு பெய்த பலத்த மழையால் கருங்குளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் கார், பைக் போன்ற வாகனங்கள் நீரில் மூழ்கின. ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது.

திருச்சி:

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட 336 ஏரிகளில் தொடர்மழை காரணமாக 92 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் காரணமாக மிதமான மழை மற்றும் காற்று வீசுவதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, தேவகோட்டை அருகே உள்ள எழுவன்கோட்டை விருசுழி ஆறு தடுப்ணையில் இருந்து வெளியேறும் நீரை கண்மாய்களுக்கு திருப்பி விடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக புகார் தெரிவித்த விவசாயிகள், வீணாக கடலில் கலக்கும் நீரை கண்மாய்களுக்கு திருப்பிவிட கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒருவார காலமாகவே கனமழை பெய்து வருகிறது. திருவாமாத்தூர் காரணை பெரும்பாக்கம் ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பாயும் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை - தாம்பரம்:

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கன மழையின் காரணமாக தாழ்வான பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவு முதல் இடுப்பளவு வரை மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

குறிப்பாக தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது, சிலரது குடியிருப்புக்குள்ளும் மழை நீர் சூழ்ந்திருப்பது காண முடிகிறது.

சென்னை - பூவிருந்தவல்லி:

இரவு முழுதும் பெய்த கனமழை காரணமாக பூவிருந்தவல்லியில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குன்றத்தூர் சாலை, குமணன்சாவடியில் 2 அடியில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்று வருகின்றன. அதேபோல் குமணன் சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். குன்றத்தூர் - மாங்காடு சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்கு வரத்து சென்று கொண்டிருக்கின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com