செய்தியாளர்: பிரசன்னா
மதுரையில் நேற்று மதியம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளநீர் புகுந்து குடியிருப்பு வாசிகள் அவதியுற்றனர் இதையடுத்து தமிழக முதல்வர், பொதுமக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசி அவர்...
தமிழ்நாடு முதலமைச்சர், மதுரை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக பார்வையிட உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பாகவே ஆட்சித் தலைவருடன் பணிகளை மேற்கொண்டுள்ளோம். அதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பந்தல்குடி கால்வாய் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக வருவதால் அந்த தண்ணீர் வைகை ஆற்றுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மூன்று டிரான்ஸ்பார்மர் களை அகற்றும் பணி நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே, பெய்த மழையின் காரணமாக விவசாயத்திற்காக உள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக அதிகமான நீர் உள்ளதால் தான் வெள்ளநீர் வந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளது. நாளை காலைக்குள் தண்ணீர் அகற்றப்படும் அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
கனமழை வந்தாலும் இனி தாக்குப்பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்ற வருகிறது. செல்லூர், பந்தடி, அல் அமீன் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பணிகள் பார்த்துள்ளோம், இந்த மழையில் எதிர்பார்த்த சேரதாரம் இல்லை, பெரிய சேதாரம் இல்லை. ஆனாலும், கூட இனிவரும் காலங்களில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.