‘நாளை 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும்' - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ஞாயிறன்று கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஏனைய வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.