தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் முடிவுக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், வெப்பச்சலனம் காரணமாக பரவலாக கோடை மழை பெய்துவருகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் 10 ஹெக்டேர் பரப்பளவிலான முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 4 மணி நேரத்திற்கு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பொழிந்தது.
மயிலாடுதுறை, தூத்துக்குடி, தஞ்சை, ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் நல்லி கிராமத்தில் 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மூவரும் வழிபாட்டிற்காக கோயிலுக்கு சென்றபோது இந்த துயரம் நிகழ்ந்தது. இதே போல், சிவகங்கையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேலசித்துவார்வாடி கிராமத்தில் வயலுக்கு சென்று வீடு திரும்பிய போது, மின்னல் தாக்கிய பெண் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.