கடலூரில் மழையில் வீட்டுச் சுவர் விழுந்து 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் பவுணாம்பாள் (70). விவசாய கூலித்தொழிலாளியான இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். திட்டக்குடி சுற்றுவட்டாரத்தில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதில் பல இடங்களில் வீடுகள் மற்றும் வீட்டுச் சுவர்கள் சாய்ந்தன. இதில் பவுணாம்பாள் வீட்டுச் சுவரும் விழுந்துள்ளது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக பவுணாம்பாளை காணவில்லை. பவுணாம்பாள் அடிக்கடி செல்லும் தனது பேத்தியின் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து, அக்கம்பத்தினர் அவரை தேடாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் பவுணாம்பாளின் வீட்டின் அருகிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், இடிந்து கிடந்த வீட்டின் சுவரை அப்புறப்படுத்தி பார்த்துள்ளனர். அப்போது பவுணாம்பாள் ரத்தம் வடிந்தபடி, உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்த மக்கள், இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளனர். பின்னர் பவுணாம்பாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.