மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளி கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ மாணவிகள் கூட கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மதுரையில் மாசிவீதி, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற பல இடங்களில் கனமழை மழை பெய்தது. கிடாரிப்பட்டி பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சர்வேயர் காலனிபாரத் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
நேற்றிரவு ஒருமணி நேரம் பெய்த மழையின் காரணமாக தேங்கிய மழைநீரே பல இடங்களில் இன்னும் முழுமையாக வெளியேறாத சூழலில், இன்று பிற்பகல் பெய்த மழை மேலும் சிக்கலுக்கு வழிவகுத்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் இதுதொடர்பாக கூறுகையில், “பலமுறை மழைநீர் தேங்குவது தொடர்பாக அரசிடம் தெரிவித்துவிட்டோம். வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றுவிட்டது. பாம்பு, பூரான் போன்றவைகளும் இருக்கின்றன. குழந்தைகளை வைத்துக்கொண்டுதான் வாழ்கிறோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.