தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடியுடன் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக அதிக வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் கோவில்பட்டி பகுதியில் விவசாயிகள் தற்பொழுது தான் விவசாய பணிகள் ஆரம்பித்து உள்ளதால், மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும், மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைதொடர்ந்து சிறிது நேரத்தில் லேசான சாரலுடன் மழை தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த காரணத்தினால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில்பட்டி மட்டுமின்றி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததது.