வங்கக்கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆந்திர கடற்பகுதியில் காக்கிநாடாவுக்கு அருகில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.