ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் பெய்து வரும் கனமழையால், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வங்ககடலில் உருவான ’புரெவி’ புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ராமநாதபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. குறிப்பாக கொத்தாவாச்சேரியில் 33 செ.மீ மழையும், லால்பேட்டையில் 29 செ.மீ மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ மழையும், காட்டுமன்னார் கோயிலில் 25 செ.மீ மழையும், குறிஞ்சிப்பாடியில் 25 செ.மீ மழையும், சேத்தியாத்தோப்பு பகுதியில் 20 செ.மீ மழையும், புவனகிரி பகுதியில் 19 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.