திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரதுஉடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அத்துடன் பாதுகாப்பு பணிக்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்த 7வது அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த சில மணி நேரமாக கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியில் குவிந்து இருக்கும் திமுக தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திடீரென கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு திமுக தொண்டர்களும் குவியத்தொடங்கியுள்ளனர். மேலும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே குவிந்துள்ள தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழத்தொடங்கியுள்ளனர். இதனால் அந்த இடமே சோகமாக காட்சியளிக்கிறது.