’’வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணியுங்கள்’’ - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

’’வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணியுங்கள்’’ - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
’’வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணியுங்கள்’’ - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நிலவரம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் திங்கட்கிழமையிலிருந்து விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்குப்பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது. இரண்டு நாட்களிலேயே இந்த மாற்றம் தெரிந்தால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும். கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும். மற்ற மாநிலத்தைவிட நமது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக நினைத்துக்கொண்டு மக்கள் வெளியே வரக்கூடாது.

மத்திய அரசும், உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியபடி பல இடங்களில் ஸ்க்ரீனிங் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தொற்றின் தாக்கம் குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளில் உள்ள அதிகம் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பதை தவிர்த்து இந்த ஸ்க்ரீனிங் சென்டர்களை முறையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து உள்ளே வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். போதுமான படுக்கை வசதிகள் நமக்கு இருந்தாலும், 12 ஆயிரம் கூடுதல் ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளும் அமைக்கப்படவுள்ளன.

தடுப்பூசி பணி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டபோது, பெரிய அளவில் யாரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை 4000 அளவிலேயே இருந்தது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படுவதாகக் கூறப்பட்டது. ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி வீணாவதை 5% ஆக குறைத்துள்ளோம்.

மேலும் இந்த முறை ஒரே வீட்டிலுள்ளவர்களுக்குத்தான் தொற்று வேகமாக பரவுகிறது. எனவே வீட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் பிற மாநிலங்களில் அடுத்தடுத்து தயாரிக்கப்பட்டபோது, தமிழகத்தில் இந்த மருந்து கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துவரும் ஒருவர், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவு, ஆக்சிஜன் உதவியில் இருப்பதற்கான ஆவணம் உள்ளிட்ட 3 சான்றுகளை கொடுத்தால் அந்த நோயாளியின் உறவினருக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தமிழகத்தில்தான் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்திற்கு வரும் ரெம்டெசிவிர் மருந்தின் அளவை அதிகரிக்க முதல்வர் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார். ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்துக்கான சிறப்பு மையம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com