கடலூர் அருகே டிக்கெட் எடுக்காத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துநர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
திருச்சியிலிருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்து ஒன்றில் திட்டக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் கோபிநாத், பழனிவேலிடம் பயணச்சீட்டு வாங்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு காவலர் என பதிலளித்த பழனிவேல் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளார்.
இதனால் நடத்துநருக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் நீண்ட இந்த வாக்குவாதத்தையடுத்து பயணிகளும் காவலருக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
வாக்குவாதம் கடுமையாக முற்றிய நிலையில் நடத்துனர் கோபிநாத் திடீரென பேருந்திலேயே மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த பயணிகள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு பேருந்தில் வைத்து கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், பேருந்தில் பயணம் செய்த பயணிகளால் பிடித்துவைக்கப்பட்டிருந்த காவலர் பழனிவேலை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.