செய்தியாளர்: முகேஷ்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 19வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் அவர்.
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனு கடந்த முறை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?” என அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். பின்னர், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை இன்றைக்கு (14.02.2024) ஒத்திவைத்திருந்தார்.
இதையடுத்து கைதாகி 240 நாட்களுக்குப்பிறகு, தன் அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்தார். நேற்று ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சூழலில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று பிற்பகல் 2:15 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.