குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
Published on

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று‌ள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக வந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.5 கோடி மதிப்பில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அகநாள ஆய்வுகூடம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் ரூ.1 கோடி மதிப்பில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தையும் அவர்கள் துவக்கி வைத்தனர். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மூன்று ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவமனை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து உள்ளது. பல்வேறு புதிய கட்டிடங்கள், அதிநவீன உபகரணங்கள் கொண்டுவரப்பட உள்ளது. சர்வதேச தரம் வாய்ந்த தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையிலான அதிநவீன சிகிச்சை பிரிவு இன்று துவங்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பான புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என கூறினார். குழந்தைக்கு ரத்தம் கொடுத்த நபரின் ரத்தம் மீண்டும் சோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை எனவும் எனவே அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி பாதிப்பு இல்லை என அவர் கூறினார். 

மேலும் குழந்தைக்கு அனைத்து வகையான உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என கூறிய அவர், பெற்றோர்கள் எங்கு விரும்புகிறார்களோ அங்கேயே குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்றார். மேலும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளித்தால் எச்ஐ வி ரத்தம் எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com