தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வது வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடல் உறுப்பு தானத்தை துவக்கி வைத்து உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தை பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வதில் எந்த முறைகேடும் இல்லை, வெளிப்படைத்தன்மையுடன் தான் உடல் உறுப்பு தானம் செய்யப் படுகின்றன. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதில் அதிகம் வெளிப்படைத் தன்மை உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் உடல் உறுப்பு தானத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு முதல் உரிமை அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து உடல் உறுப்பு தானம் பெறுவதற்கான நோயாளிகள் இல்லையெனில் மட்டுமே தனியாருக்கு உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்து, அதிகம் பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.