கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் தனி2யார் மகளிர் கல்லூரியொன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் மாணவிகளுக்கான விடுதி, ஹோப்ஸ் சந்திப்பு அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விடுதியிலிருந்த பெரும்பாலான மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கல்லூரி விடுதியில் ஆய்வு செய்தனர்.
கல்லூரி விடுதியில் உள்ள கீழ்நிலை, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சமையலறை, உணவுப் பொருட்கள் வைப்பறை ஆகிய இடங்களில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி விடுதியில் இருந்து நீர், உணவு மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
முதல்கட்ட ஆய்வில் குடிநீர் மாசுபாட்டால்தான் மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதென உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை, மொத்தம் 114 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து விடுதியின் கீழ்நிலை, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாணவிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும் 10 மாணவிகளுக்கு iv fluids செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மற்ற மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. விடுதியில், மாநகராட்சி குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி விநியோகத்தில் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகிக்கத்தின் அடிப்படையில், கல்லூரி தரப்பில் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஆய்வில் குடிநீரில் ஏற்பட்ட மாசு தொடர்பான விவரங்கள் அறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.