சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை விதைக்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது பலத்த கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
சில தினங்களுக்கு நடந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சொற்பொழிவாற்றிய மகா விஷ்ணு தன்னுடைய யூட்யூப் தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் இருந்துதான் சில வீடியோ காணொளிகள் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. அந்த வீடியோக்களை பகிர்ந்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்தவர்கள் திமுக ஆதரவாளர்கள் மற்றும் திமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தான். பலருக்கும் அந்த வீடியோக்களை பார்த்ததும் கடும் அதிர்ச்சி. அரசுப் பள்ளி ஒன்றில் ஒவர் பாவ, புண்ணியம், கர்மா போன்றவற்றை நியாயப்படுத்தி பேசியுள்ளது பலராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனப் பதிவுகள் குவிந்தன. இன்று காலையே சம்பந்தப்பட்ட மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு அமைச்சரே வந்து தன்னுடய கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். அத்துடன், ஒற்றை ஆளாய் கேள்வி எழுப்பிய தமிழ் ஆசிரியரையும் மேடையேற்றி மரியாதை செய்தார். முதல்வர் ஸ்டாலினும் உடனடியாக அறிவியல் பாதையில் கல்வி செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவ்வளவு நடந்தத பிறகும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை என்ன தவறு நடந்தது என்பதே புரியாமல் பேசியிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி அளித்துள்ள விளக்கத்தில், ஆன்மீகம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் பேசுகையில், ”பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றப்படவில்லை. அது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் ஸ்பீச் தான். மற்றப்படி மாணவர்களை தூண்டுவதற்கோ...மதத்தை பற்றி பரப்புவதற்கோகோ கிடையாது. அதற்கான நோக்கமும் கிடையாது.
இது பாரம்பரியம் மிக்க பள்ளி, தகைசால் பள்ளியாக இருக்கிறது. ஆகவே, அரசுப்பள்ளி மாணவர்கள் எவ்வாறு வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்வது , அவர்கள் சிந்தனையின் வழி எவ்வாறு தங்களை நிறுத்தலாம் என்பதன் நோக்கத்தில்தான் மோட்டிவேசன் ஸ்பீச் கொடுக்கப்பட்டது. மற்றபடி இதில் எந்த குழப்பமும் கிடையாது.
இதில் ஆன்மீக குறித்து எதுவும் பேசவில்லை... மாணவர்களின் “mental stability" குறித்துதான் பேசப்பட்டது. இதை mixing செய்தார்களா? என்பது குறித்து எனக்கு தெரியாது. முதன்மை கல்வி அலுவலர் அனுமதி பெற்றே நிகழ்ச்சியை நடத்தினோம். கூடத்திற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக குழு செய்தது. எதிர்காலத்தில் விஞ்ஞான முறையில் மாணவிகள் எவ்வாறு சாதிக்க வேண்டும் என்பதற்காகதான் தவிர.. மதம் சார்ந்த கருத்துக்கள் எதுவும் இல்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.
பாவ, புண்ணியம் என்பதோ, முற்பிறவி என்பதோ எப்படி மதம் சார்ந்த கருத்துக்கள் ஆகாது? சிறுபிள்ளை தனமாக அவர் அடிம்பிடிக்கிறார். மதம் தொடர்பாக கருத்துக்களை பேசுவது குற்றமல்ல. அரசுப் பள்ளியில் அது பேசப்பட்டதுதான் இங்கு பிரச்னை.
இந்நிலையில், அசோக் நகர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசியை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்ட சிறப்பு விருந்தினரை பேச வைத்தமைக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.