குண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..!

குண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..!
குண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..!
Published on

துப்பாக்கி குண்டுகளுக்கு தனது ஒரே ஒரு மகனை பலி கொடுத்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார் தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர். ராணுவ உடை அணிந்து நாட்டை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றித் திரிந்த ரஞ்சித்தோ இன்று பிணவறையில் சடலமாக படுத்திருக்கிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் இதுவரை பெண்கள், பள்ளி மாணவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 13 பேரில் ஒருவர் தான் ராணுவ வீரர் கனவில் இருந்த ரஞ்சித். ரஞ்சித்தின் மறைவை அடுத்து அவரின் குடும்பமே நிலைகுலைந்துள்ளது. ஒரேயொரு மகனை பறிகொடுத்துவிட்டு சோகத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் தவித்து நிற்கிறார் ரஞ்சித்தின் தந்தை பாஸ்கர். 

இதுகுறித்து ரஞ்சித்தின் மாமாவான குமார் கூறும்போது, “ இது ஒரு திட்டமிட்ட கொலை. போராட்டத்தில் பங்கேற்க ரஞ்சித் அங்கு செல்லவில்லை. போராட்டத்திற்கான எந்த முழக்கத்தையும் அவன் எழுப்பவில்லை. போராட்டம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்கவும், அதுதொடர்பான வீடியோ காட்சிகளை பதிவு செய்யவும் நண்பர்கள் கூடத்தான் சென்றிருந்தான். அப்போது கூட்டத்தில் சிக்கிக் கொண்டான். அவர்கள் இதனை சாதகமாக பயன்படுத்தி அவனை திட்டமிட்டு கொன்றுவிட்டனர். போலீசார் வேண்டுமென்றே வன்முறையை தூண்டிவிட்டு போராட்டக்காரர்களை கலைக்க திட்டமிட்டனர்” என்றார்.

கண்ணீரை அடக்க முடியாமல் குமார் மேலும் பேசியதாவது:-  “ தினசரி 5 மணிக்கே எழுந்துவிடுவான். நல்ல குத்துச்சண்டை வீரரும் கூட. இப்பகுதியில் பல தடவை ரத்த தான முகாம் நடத்தியுள்ளான். ஏற்பாடு செய்வதுடன் அவனும் ரத்ததானம் செய்வான். கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவும் நல்ல மனது கொண்டவன் ரஞ்சித். அதற்கேற்றாற்போல் உதவியும் செய்துவந்தான். அவன் ஒரு குழந்தை மாதிரி சார்” என்றார்.

குமார் முடிக்கும் முன்பே சோகத்தை அடக்க முடியாமல் கதறியபடி வாய் திறக்கிறார் ரஞ்சித்தின் தந்தை பாஸ்கர். அவர் பேசும்போது, “ ராணுவத்தில் சேர ஆர்வத்துடன் இருந்தான் ரஞ்சித். அது மட்டுமே அவனது ஒற்றைக் கனவாகவும், இலக்காகவும் இருந்தது. சமீபத்தில் கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ ஆட்சேர்ப்பில் பங்கேற்றிருந்தான். ஆனால் அதில் அவன் தேர்வாகவில்லை. எல்லோரும் முதல் முறை தேர்வாகுவதில்லை. வருத்தப்படாதே என ஆறுதல் கூறினேன். அவனும் ‘நான் மறுபடி முயற்சி செய்றேன் அப்பா’ என கூறினான். அவனது முழு உலகமும் ஜிம்முக்கு செல்வதிலேயே இருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்தநாளில் கூட வீட்டில் காலை சாப்பாட்டை முடித்துவிட்டு 11.30 மணிக்குதான் கிளம்பினான். அவன் போராட்டத்தை தான் பார்க்க போகிறான் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் சுமார் 1 மணி நேரத்தில் அதாவது 12.30 மணிக்கு அவன் இறந்துவிட்டான் என எங்களுக்கு அழைப்பு வந்தது.” என மிகுந்த வேதனையில் கூறினார் பாஸ்கர்.

நாள்தோறும் வேலை செய்தால் சம்பளம் என்ற அடிப்படையில் தினசரி கூலியாக உள்ளார் பாஸ்கர். தனது ஒரே ஒரு மகனுக்கு சிகிச்சை கூட அளித்து பார்க்க முடியவில்லை பாஸ்கரால், நேரடியாக பிணவறையில் தான் மகனின் உடலை கண்டிருக்கிறார். “நாங்கள் எங்கள் ஒற்றை மகனை இழந்து தவிக்கிறோம். இனி அதிகாரிகளை பற்றியோ, அரசியல்வாதிகளை பற்றி எங்களிடம் சொல்ல எதுவுமே இல்லை” என மனது படபடெக்க பேசி முடித்தார் பாஸ்கர்.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com