புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 'வள்ளலார் 200' என்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''சென்னை புழல் சிறையில் உள்ள பெண் கைதிகள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அவர்களது உறவினர்களிடம் பேசுவதற்கு வழிவகை செய்தது போல் தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி செய்யப்படும். அதற்கான தொடக்கம்தான் புழல் சிறையில் வீடியோ கான்ஃபிரன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இதன் மூலம் கைதிகளின் மன அழுத்தம் குறையும். அவர்களது வீட்டில் உள்ள குடும்பத்தினர் மற்றும் தாய், தந்தையர், கணவன், மனைவி, குழந்தைகளை, பார்த்து பேசவும் முடியும். உடலில் கேமாரா அணிந்து சிறை காவலர்கள் சிறைக்குள் செல்லும்போது அங்கு நடக்கும் நிகழ்வுகளை சென்னையில் இருக்கும் சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இதன் மூலம் மத்திய சிறைகளில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் சென்னையில் இருந்து கண்காணிக்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்துள்ளோம்.
ஒவ்வொரு மத்திய சிறைக்கும் ஐந்து உடலில் அணியும் கேமரா வழங்கி உள்ளோம். இதன் மூலம் சிறையில் முழு கட்டுப்பாட்டையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும். இதன் மூலம் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும். கைதிகளின் செயல்பாட்டை கண்காணிக்க முடியும்.
சிறைக்கு கைதிகள் வரும் போது கொரோனா சோதனை செய்துதான் அனுப்புகின்றோம். முடிந்த அளவு சிறைக்குள் கொரோனா பாதிப்பை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உரிய பாதுகாப்பு இல்லங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். சில இடங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலையை நாங்கள் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை; அவரை ஜோக்கராகத்தான் நாங்கள் வைத்துள்ளோம்'' என்றார்.
மேலும் 8 மாதத்தில் ரணகளமாகும் என்ற பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருக்கும் கருத்திற்கு பதில் சொன்ன ரகுபதி, அதுபோன்று வேறு மாநிலத்தில் வேண்டுமென்றால் அவர்கள் செய்யலாம் என்றும் தமிழகத்தில் எதுவும் நடக்காது எனவும் ரகுபதி தெரிவித்தார்.