விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக ஐயப்பன் என்ற இளைஞர் ஒரு மணி நேரத்தில் 4,483 முறை மோஸ்ட் ஜம்பிங் ஜாக் செய்துள்ளார்.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் ஐயப்பன். இவர், தனக்கு இயற்கை கொடையாக அளித்த குதிக்கும் திறனை கொண்டு சாதனை நிகழ்த்த முடிவு செய்து கடந்த 3 வருடங்களாக, கயிறை கொண்டு ஆடும் ஸ்கிப்பிங் விளையாட்டில் கடுமையாக பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி நோபில் உலக சாதனைக்காக ஒருமணி நேரம் 8,747 முறை ஸ்கிப்பிங் செய்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கால்களுடன், கைகளையும் அசைத்து குதிக்கும் முறையான மோஸ்ட் ஜம்பிங் ஜாக் முறையில் இத்தாலியை சேர்ந்த மேரியோ சில்விஸ்ட்ரி என்பவர், கடந்த வருடம் மே 9-ம் தேதி நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியின் போது ஒருமணி நேரத்தில் 3,873 முறை மோஸ்ட் ஜம்பிங் ஜாக் செய்திருந்தார்.
இதையடுத்து தன்னார்வ அமைப்பின் உதவியுடன், மேரியோ சில்விஸ்ட்ரி சாதனையை முறியடிக்கும் விதமாக இன்று ஐயப்பன் முயற்சி மேற்கொண்டார். கல்லூரி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், சக மாணவர்கள், தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், மாவட்ட நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
கின்னஸ் சாதனை அமைப்பின் விதிமுறைகளின் படி, ஒரு மருத்துவர், இரண்டு உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் என 4 நடுவர்களின் முன்னிலையில் ஐயப்பன் தனது சாதனை முயற்சியை மேற்கொண்டார். இவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைதட்டி உற்சாகப்படுத்தியபடி இருந்தனர்.
தொடக்கத்தில் இருந்தே நல்ல வேகத்தில் குதித்த ஐயப்பன், ஒருமணி நேர முடிவில் 4,483 என்ற எண்ணிக்கையை எட்டினார். ஒருமணி நேரத்தில், இத்தாலி சாதனையாளரை விட சுமார் 600 முறை அதிகமாக குதித்து அவரது சாதனையை முறியடித்த ஐயப்பனுக்கு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
பின்னர் பேசிய ஐயப்பன், தான் இன்னும் தொடர்ந்து சாதனை படைக்க விரும்புவதாகவும் அதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.