திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மேலும் 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின்மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் டிச.10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தரப்பிலும், அமைச்சராக இருந்த உதயகுமார் தரப்பிலும், அரசு தரப்பிலும் தொடரப்பட்ட வழக்குகள் அவை. 3 வழக்குகள் ஏற்கெனவே அரசாணையில் ரத்து செய்யப்பட்டது என்று நீதிபதி தெரிவித்தார். அதேசமயம் அமைச்சர் உதயகுமார் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
குறிப்பாக ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுப்பது தொடர்பாகவும், சென்னை பெருவெள்ளத்திற்கு அமைச்சர் உதயகுமார் பதவி வகித்த துறையே காரணமாக இருந்ததாக மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்ததாகவும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது திமுக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் குமரேசன், இவை அவதூறு பரப்பும் அல்லது தண்டிக்கக்கூடிய குற்றங்கள் கிடையாது என்றும், ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் ஒரு விமர்சனத்தைத்தான் முன்வைத்தார் என்றும் கூறி வாதிட்டார்.
அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, இந்த 12 வழக்குகள் தவிர மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாகவும், அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், எனவே அவர் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அவர் வாதத்தை முன்வைத்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி 4 வழக்குகளை ரத்து செய்ததுடன், மற்ற 8 வழக்கு விசாரணையை டிச.14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான மற்ற வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதி ஸ்டாலினுக்கு எதிரான மேலும் 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், முதல்வரை கடுமையாக விமர்சிப்பதை ஸ்டாலின் தவிர்க்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 'முதல்வர், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற கருத்துக்களை கூறுவது மக்களிடையே தவறாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே ஆதாயத்துக்காக கட்சி தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. ஆரோக்கியமான அரசியலை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டும்" என்று நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தினார்.