தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்குவது குறித்த கோரிக்கைக்கு நேரடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கி, பயன்பாட்டிற்கு கொணர உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் இளங்கோ உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசியலமைப்பு சட்டத்தின் கூறு 348 பிரிவு 2 ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அந்தந்த மாநில அலுவல் மொழியை, உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்கலாம்" என குறிப்பிடுகின்றது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 18 நாட்களில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக்கினார். அதன்பிறகு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் இந்தி உயர்நீதிமன்ற பயன்பாட்டு அலுவல் மொழியாக உருவாக்கப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
2002ஆம் ஆண்டு தமிழகத்திலும் தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்கக் கோரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார். 2006 ஆம் ஆண்டு மீண்டும் அதற்கான முயற்சி எடுக்கப்பட்ட நிலையில் அப்போதைய அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டம், தமிழை உயர்நீதிமன்ற மொழியாக ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக 2006 டிசம்பர் 7ஆம் தேதி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு பதிலாக சட்ட நடைமுறை இல்லாமல் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 2007ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு தமிழ், குஜராத்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளை உயர் நீதிமன்ற மொழியாக்க முடியாது என தீர்மானித்தது. ஆனால் ராஜஸ்தான் மாநில வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் 2015 ஏப்ரலில் அனுப்பிய கடிதத்தில் இந்தியை உச்சநீதிமன்ற மொழியாகக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதுபோல வழக்கறிஞர்கள் அந்தந்த மாநில மொழிகளில் வாதிடுவதை அங்கீகரிக்க மறுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் இந்திய ஆட்சிமொழிச் சட்டம் பிரிவு 7க்கு எதிரானதாகும்.
2015, 16 ஆம் ஆண்டுகளில் டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் தலைமையிலான சட்ட மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக் குழுவானது உயர் நீதிமன்ற மொழியாக அந்தந்த மாநில மொழிகளை ஆக்குவதற்கு நீதித்துறையிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இருப்பினும் உச்சநீதிமன்றத்தை காரணம் கூறி, மத்திய அரசு தமிழ் மொழிக்கான உரிமையை மறுத்து வருகிறது. ஆகவே தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவது குறித்த கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதலுக்கு அனுப்பாமல், நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கி, பயன்பாட்டிற்கு தொடர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.