சென்னை செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை ஏழுகிணறு போலீசார், மிண்ட் தெருவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரிடமிருந்து தப்பி, அருகில் உள்ள ஒரு அலுவலகத்துக்குள் புகுந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர்.
அப்போது அதில், ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக குஜராத்தை சேர்ந்த பார்த்படேல், அஸ்வின் பட்டேல் மற்றும் மின்ட் தெருவில் ஒரு அலுவலகத்தில் இருந்த பிரஜேஷ் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வைத்திருந்தது துபாயில் இருந்து பெறப்பட்ட ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. மூன்று பேரும் கமிஷனுக்காக வேலை செய்வதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பூக்கடை காவல் உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, ஏழுகிணறு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர், தீவிர விசாரணைக்கு பின் மூன்று பேரையும் பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.