முழு ஊரடங்கின் வாகன சோதனையில் பிராட்வே பகுதியில் ரூ. 17 லட்சத்து 79 ஆயிரம் ஹவாலா பணம் போலீசாரிடம் சிக்கியது. காய்கறி வாங்கப்போவதாக கூறி ஏமாற்றிய வாலிபரை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பிராட்வே சாலை மண்ணடி மெட்ரோ அருகில் இன்று எஸ்பிளனேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருப்பு நிற பை ஒன்றை எடுத்து கொண்டு ஒருவர் நடந்துச் சென்றார். எஸ்பிளனேடு போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, அவர் காய்கறி வாங்கப் போவதாக முன்னுக்குப்பின் முரணாக கூறினார். போலீசார் அவரது பையை சோதித்தபோது அதில் 8 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.
மேலும், விசாரணையை அடுத்து, அவர் தங்கி இருந்த வீட்டை போலீஸார் சோதனை செய்ததில் அங்கு ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் அவரிடம் இருந்து ரூ. 17 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் பணம் என்னும் மிஷின் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். ஆனால் பணத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்பதால் அவை அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் மொய்தீன் தம்பி (26) என்பதும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்ய கொண்டு செல்லும் போது போலீசாரிடம் இவர் சிக்கி உள்ளார்.
இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பணத்தையும் பிடிபட்ட நபரையும் போலீசார் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. இதைப்போல கடந்த 20 ஆம் தேதி உரிய ஆவணங்கள் இல்லாமல் பைக்கில் ரூ. 99 லட்சத்துடன் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாதர் சாகிப்பை போலீசார் வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.