பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை போரூர் அருகே உள்ள மதனநந்தபுரம் பகுதியில் வசித்து வந்த ஏழு வயது சிறுமி ஹாசினியை, பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த், கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்ததால் ஜாமீனில் வெளிவரமுடியவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததால், எளிதாக ஜாமீன் கிடைத்துள்ளது. தனது மகளை கொடூரமாக கொலை செய்த தஷ்வந்திற்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோர்களுக்கு இச்சம்பவம் பெரும் வேதனையை அளித்துள்ளது.
மேலும், தஷ்வந்த் ஜாமீன் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹாசினியின் தந்தை பாபு, இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் என்ன கூறுகிறது என்றும் தவறிழைப்பவர்களை நீதிமன்றமே ஊக்குவிக்கின்றதா எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.