ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட நன்கொடைகளிலேயே அதிக தொகையை ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சியில் பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் இதற்காக நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதி உதவியில் இந்தியாவிலேயே இதுதான் அதிகத் தொகையாகும். சிவகாசியைச் சேர்ந்த பாலச்சந்திரன், மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இஸ்ரோ - ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்த ஊழலைப் பணியிலிருக்கும் போதே அம்பலப்படுத்தியவர் ஆவார்.