சென்னை பெருநகரில் வசிக்கும் மக்களின் மன அழுத்தத்தை போக்கவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடிப் பாடி மகிழ்வோம் என்று சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் முக்கிய சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கொண்டாட்டக் களமாக மாற்றப்படும்.
இந்நிலையில், அண்ணாநகர், ஓஎம்ஆர், மயிலாப்பூர், தியாகராய நகர், பெரம்பூர் என்று பல்வேறு பகுதிகளில் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டிருந்த நிலையில், அண்ணா சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படுவது யாரும் எதிர்ப்பாக்காத ஒன்று. ஏனென்றால் சென்னையின் உயிர் மூச்சு என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருப்பது அண்ணாசாலை. அந்த சாலையில் ஸ்பென்சர் முதல் ஜிபி சாலை வரை, முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கொண்டாட்டத்துக்கான இடமாக ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அண்ணா சாலையில் அவரவர் விருப்பம்போல் விளையாட்டு மைதானமாக மாற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிறுவர்கள், பெரியவர், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். இசை, நடனம் என்று ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் களைகட்டியது. மிகுந்த உற்சாகத்துடன் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதனால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.
இந்த நிகழ்ச்சியில் செல்ல பிராணிகளுக்காகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று அடுத்து வரும் மூன்று ஞாயிற்றுக் கிழமைகளிலும் இதே இடத்தில் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.