2020-ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் மக்கள் அதை உற்சாகம் பொங்க வரவேற்றனர்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிவகுத்து வந்த மக்கள், மெரினா கடற்கரையில் கூடத் தொடங்கினர். பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை என முக்கிய இடங்களில் திரண்ட மக்கள், ட்வெண்டி ட்வெண்டி என்றழைக்கப்படும் 2020-ஆம் ஆண்டை எதிர்நோக்கி காத்திருந்தனர். மணி நள்ளிரவு 12-ஐ தொட்டதும், ஹேப்பி நியூ இயர் என விண்ணதிர முழக்கமிட்டு புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். தலைநகர் சென்னையைப் போலவே திருச்சி, தூத்துக்குடி, மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் குறைவில்லாத உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றார்கள் மக்கள்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பட்டாசுகள் வெடித்து, ஹேப்பி நியூ இயர் என உற்சாக முழக்கமிட்டு மதம்,மொழி, இன பேதமின்றி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கோயில்கள், தேவாலயங்கள் என வழிபாட்டுத் தலங்களில் திரண்ட மக்கள், சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சக மனிதர்களுடன் எந்த பேதமுமின்றி கூடிக் களிக்கும் ஒவ்வொரு கொண்டாட்டத் தருணமும் வாழ்வை இன்னும் அழகாக்கி விடுகின்றன