உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. 6000 பேர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், பல்லாயிரக்கணக்கான துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவை ஒட்டி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் , மத்திய நிறுவனங்கள், மத்திய தொழில்நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அயோத்தியில் உள்ள ராம் லல்லா பிரதான் பிரதஷ்தா ஜனவரி 22-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அலுவலர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக இந்தியா முழுவதும் உள்ள மத்திய அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு ஜனவரி 22, 2024 அன்று மதியம் 2.30 மணி வரை (அரைநாள் மூட) விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் இம்முடிவை சம்பந்தப்பட்ட அனைவரது கவனத்திற்கும் கொண்டு வரலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய பார்கவுன்சில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு ஜனவரி 22-ஆம் தேதி அனைத்து நீதிமன்றத்திற்கும் விடுமுறை அளிக்கக்கோரி கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, ஐந்து மாநிலங்களில் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் மற்றும் சத்தீஷ்கர் போன்ற பகுதிகளில் ஜனவரி 22-ஆம் தேதி உலர் நாளாக அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு ராமர் கோயில் சிறப்பு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் உலக நாடுகள் பலவும் வெளியிட்ட ராமர் அஞ்சல் தலைகள் அடங்கிய புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
மேலும், சிறப்பு தபால் தலையில் ராமர் கோயில், கோயிலில் உள்ள சிற்பங்கள், சரயு நதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ராமர் கோயில், விநாயகர், ஹனுமான், ஜடாயு, கேவத்ராஜ், சபரி உருவங்கள் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது. நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய ஐம்பூதங்களை குறிக்கும் வடிவமைப்புகளும் தபால் தலை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தில் அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட 20 நாடுகள் வெளியிட்ட ராமர் தபால் தலைகளும் இடம் பெற்றுள்ளன.