ரூ50 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலை - அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ரூ50 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலை - அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ரூ50 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலை - அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்
Published on

அமெரிக்காவில் பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 16 நிறுவனங்கள் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் இங்கிலாந்து சென்ற அவர், அந்த பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்தகட்டமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். 

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க நியூயார்க்கில் 'யாதும் ஊரே' என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். தமிழகத்தில் தொழில் தொடங்க இது வசந்த காலம் என்றும், முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்தார். 

இதைத் தொடர்ந்து JEAN MARTIN, JOGO HEALTH, ASPIRE CONSULTING உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்நிறுவனங்களின் முதலீட்டால் தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர HALDIA PETROCHEMICALS என்ற அமெரிக்க நிறுவனம் தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க கொள்கை அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி சம்பத், ஆர்.பி உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com