பாஜகவின் ஹெச்.ராஜா ஊடகங்களை அநாகரிகமாக பேசிவருகிறார்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

பாஜகவின் ஹெச்.ராஜா ஊடகங்களை அநாகரிகமாக பேசிவருகிறார்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
பாஜகவின் ஹெச்.ராஜா ஊடகங்களை அநாகரிகமாக பேசிவருகிறார்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Published on

பாஜகவின் ஹெச்.ராஜா ஊடகங்களை அநாகரிகமாக பேசிவருகிறார் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழகத்தில் சமீபகாலங்களில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு எளிய இலக்காகப் பத்திரிகையாளர்கள் ஆளாகி வரும் கொடுமையான போக்கு அதிகரித்து வருகிறது. இது மிக ஆபத்தானது மட்டுமல்ல, கருத்துரிமையில் நம்பிக்கை உள்ள அத்தனை ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.

செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில், வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா. நேற்றைய தினம் (27-09-2021 ) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வில் எச்.ராஜா, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம். ஆனால், நிதானம் தவறி தரம் தாழ்ந்து பேசினார். ஹெச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஹெச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும், செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு, நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஹெச்.ராஜாவின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, ஹெச்.ராஜாவின் இவ்விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் ஹெச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

பத்திரிகையாளார்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக, தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம். யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com