தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று முடிந்துள்ளது.
அதில் தலைமையேற்று பேசிய தவெக தலைவர் விஜய், திராவிட மாடல் அரசியலை எதிர்க்கிறோம், மதவாத பிரிவினை அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரித்திலும் பங்கு என பல அதிரடியான கருத்துகளை முன் வைத்தார்.
இந்நிலையில் விஜயின் அத்தகைய கருத்துகள் பாஜகவின் ஓட்டு வங்கியை பாதிக்குமா என்பது குறித்து ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பேசுகையில், “தமிழகத்தில் தேசத்திற்காக ஆக்கமும் ஊக்கமும் தந்த வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பலபேர் இருக்கின்றனர், அவர்களை பற்றியெல்லாம் பேசவில்லை, ஆனால் பெரியாரை பேசுகிறார். அவருடைய ஐடியாலஜியில் அவருக்கே தெளிவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. மதசார்பற்ற ஒரே கட்சியாக இருக்கும் பாஜகவிற்கு விஜய்யின் பேச்சால் எந்த பாதிப்பும் இல்லை, எங்களுக்கு அவர் போட்டியாக இருக்கவும் முடியாது” என்று பேசினார்.
மேலும் விஜய்யால் பாஜகவின் வாக்கு வங்கியை உடைக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திராவிட கட்சிகளின் வாக்குகளை வேண்டுமானால் அவரால் உடைக்க முடியுமே தவிர, தெளிவில்லாத ஐடியாலஜியை வைத்துக்கொண்டு பாஜக போன்ற தேசிய கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது” என்று பேசினார்.