கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்ததாகவும், 90 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆண்களுடன் பெண்களும் மரணத்திருப்பதும், தாய்-தந்தை என இரண்டு பேரையும் இழந்துவிட்டு சிலர் கண்ணீர்வடிப்பதும் பார்ப்போரின் நெஞ்சத்தை ரணமாக்கியுள்ளன.
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருப்பதோடு, ஒட்டுமொத்த இந்தியாவின் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள் முதல் பலபேர் அரசையும், அரசின் நடவடிக்கையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்தவகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கள்ளச்சாராய மரணம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என்று பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.