குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ் சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து சுமார் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைதொடர்ந்து குட்கா முறைகேடு விவகாரத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இடைத்தரர்கள் ராஜேஷ், நந்தகுமார், அதிகாரிகள் செந்தில்முருகன், பாண்டியன், கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
குட்கா ஊழல் வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாசராவ், கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்டோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐ முதன்மை நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் பேரில் அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 4 நாட்கள் தொடர் விசாரணைக்குப்பின் சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். மாதவராவ் மற்றும் சீனிவாசராவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அவர்களை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர் சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.