குட்கா ஊழல் முறைகேடு தொடர்பான புகார் வழக்கில் மேலும் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு குட்கா ஆலை அதிபர் மாதவராவின் குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய டைரியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரித்ததில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதன்படி விசாரனையில் சிபிஐ, முன்னாள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியும் தற்போதைய திருவள்ளூர் மாவட்ட சுகாதாரதுறை ஆய்வாளர் சிவகுமார் இன்று கைது செய்யப்பட்டுள்ள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தின் தற்போதைய சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொழுது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக குட்கா பொருள்களை விற்பனை செய்ய உதவியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ இவரை கைது செய்துள்ளது.
இதனையடுத்து சிவக்குமாரை சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட சிவக்குமாருக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.