குட்கா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு குட்கா ஆலை அதிபர் மாதவராவின் குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய டைரியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டனர். இதேபோன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்குமுன், கடந்த 2017ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர். தற்போது குட்கா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், லஞ்ச புகார் பற்றியும் விசாரித்ததாக கூறப்படுகிறது. சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் இச்சோதனை நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் உள்ள ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோன்று மேலும் சில முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜார்ஜ் வீட்டில் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Read Also -> குட்கா ஊழல் வழக்கு : 2 பேர் கைது