குட்கா ஊழல் தொடர்பாக சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஜார்ஜ் சிக்கியது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தடைக்குப் பிறகும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. விற்பனை நடந்ததாக கூறப்படும் காலத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்தவர்களில் ஜார்ஜும் ஒருவர். 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்ட போது சென்னை பெருநகர காவல் ஆணையர் பணியிலிருந்தவர் ஜார்ஜ்தான். முதன்முறையாக 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி வரை அந்தப் பொறுப்பை வகித்தார்.
ஏப்ரல் எட்டாம் தேதி முதல் 2014-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி வரை சென்னை காவல் ஆணையராக இருந்தவர் திரிபாதி. பிறகு அவர் மாற்றப்பட்டு 2014-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி முதல் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி வரை ஜார்ஜ் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு டி.கே.ராஜேந்திரன், அசுதோஷ் சுக்லா, மீண்டும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகித்தனர். 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம். குட்கா நிறுவன கிடங்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகு அந்தாண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி மூன்றாவது முறையாக சென்னை காவல் ஆணையரானார் ஜார்ஜ். 2017-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி அவர் அந்தப் பொறுப்பிலிருந்தார்.
சென்னை காவல்துறையில் இடம்பெற்றுள்ள பல அதிகாரிகள் குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக தமிழக முதன்மைச் செயலருக்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி கடிதம் எழுதினார் ஜார்ஜ். அதில் குட்கா நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு விற்பனையை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர் என்று தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியிருந்தார். தடைக்குப் பிறகும் மாதவரம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் குட்கா ஆலைகள் இயங்கி வந்ததாக கடிதத்தில் கூறியிருந்தார் ஜார்ஜ்.
குறிப்பிட்ட காலத்தில் குட்கா வணிகர்களிடம் கையூட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளை ஜார்ஜ் தனது கடிதத்தில் பட்டியலிட்டிருந்தார். அதில் சென்னை மாநகர காவல் ஆணையர்கள் 4 பேர், கூடுதல் ஆணையர்கள் 6 பேர், வடக்கு மண்டல இணை ஆணையர்கள் 4 பேர், மாதவரம் துணை ஆணையர்கள் 6 பேர், புழல் உதவி ஆணையர்கள் 3 பேர், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் 6 பேர், என மொத்தம் 30 பேர் இடம்பெற்றிருந்தனர். உயரதிகாரிகள் சிலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறிய ஜார்ஜ், உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். பிற அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக ஜார்ஜ் பட்டியலிட, மாதவராவ் டைரியில் இருந்த லஞ்சப் பட்டியலில் ஜார்ஜ் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. அதனைடிப்படையிலேயே தற்போது அவர் வீட்டில் சோதனை நடக்கிறது.