மதுரையைச் சேர்ந்த டேக்வாண்டோ வீரர் 1 நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வெற்றியை அவர் பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார்.
மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த நாராயணன் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு அவரது தந்தையின் மறைவிற்குப் பிறகு, அந்த துக்கத்தில் இருந்து தன் சிந்தனைகளை மடைமாற்றம் செய்வதற்காக டேக்வாண்டோ பயிற்சி செய்ய துவங்கினார். தன்னை திசை திருப்புவதற்காக அவர் துவங்கிய பயிற்சியில், இன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2016 முதல் இன்று வரை மொத்தம் 24 கின்னஸ் விருதுகளை தனது வசமாக்கி உள்ளார். இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கராத்தே மீது இருந்த ஆர்வம் டேக்வாண்டோ மீது இல்லை என்பதை உணர்ந்த அவர், அதனை நோக்கி மாணவர்களின் கவனம் திரும்ப வேண்டும் எனில், தனித்துவமான சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று உறுதியேற்றார்.
அதன் உச்சமாக கடந்த ஏப்ரல் மாதம், 1 நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை தன் ஒற்றை காலால் உடைத்து தகர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த சாதனை டேக்வாண்டோ விளையாட்டில் இதுவரை யாருமே செய்யாத சாதனை என்று பெருமை பொங்க கூறினார் நாராயணன்.
“ கான்கிரீட் கற்களை உடைக்கும் சாதனையை மேற்கொள்வதற்காக 6 மாதம் தொடர் பயிற்சி செய்தேன். அதனால் கால் பாதத்தில் கடும் வலி ஏற்பட்டு இரண்டு மாதங்கள் சரியாக நடக்க கூட முடியாமல் தவித்தேன். இப்போது இந்த வெற்றியின் மூலமாக வரலாற்று சாதனையை என்னால் நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்” என்றார்.
தான் கடைசியாக செய்த இரண்டு சாதனைகளில் ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் , மற்றொன்றை பிரதமர் மோடிக்கும் அர்ப்பணித்துள்ளதாக கூறியவர், கொரோனாகால பாதிப்புகளை எதிர்கொண்ட அரசுகளுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பே இவை என்று குறிப்பிட்டார்.