நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தது போல கட்டிடங்களுக்கும் இந்த ஆண்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கட்டுமானங்களுக்கு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர்,மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவின்போது .வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற சொத்துக்களை வாங்கும் போது, நிலத்தின் மதிப்புடன், கட்டடங்களின் மதிப்பையும் பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டும். இந்த கட்டடங்களை, எப்படி மதிப்பிட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை, பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வரையறை செய்து வருகிறது. திருத்தி அமைக்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டி மதிப்புகளை கட்டிடங்களுக்கு பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் இது தொடர்பாக அறிவிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை போன்ற கட்டிடங்களுக்கு இந்த ஆண்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
காங்கிரீட் கட்டிடம்
சென்னையில் கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு தரை தளம் சதுர மீட்டருக்கு ரூ.8,980 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.8,325 என்றும் இரண்டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.8475 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சதுர மீட்டருக்கு 127 கட்டணம்
சென்னையில் பழங்காலத்து கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூ.8,215 என்றும் முதல் தளத்துக்கு ரூ.7,470 என்றும், 2ம் தளத்திற்கு ரூ.7,830 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோன்று சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும், மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முத்திரை கட்டணமும் உயரும்
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு உள்ள பகுதியில் 20 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த கட்டிட மதிப்பினை கொண்டு இனி வருங்காலங்களில் முத்திரை தீர்வை வசூலிக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
மாநகராட்சிகளுக்கு எவ்வளவு
கோவை, மதுரை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 15 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 சதவீதமும் கொடைக்கானல், நீலகிரி ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் 15 சதவீதமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கடந்த 16 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது