ஜிஎஸ்டியின் கரங்கள் கருவாடையும் விட்டு வைக்காததால், கடலூர் மாவட்ட கருவாட்டு சந்தை களையிழந்துள்ளது. மீனுக்கு இல்லாத வரி, கருவாடுக்கா என்று கலங்கி நிற்கிறார்கள் கருவாட்டு வியாபாரிகள்.
கடலூர் மாவட்டம் காரமணிக் குப்பத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் கருவாட்டு சந்தையில் கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கருவாடு மொத்த வியாபாரிகள் வந்து விற்பனை செய்வது வழக்கம். இதனை வாங்க, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் வருவார்கள். தற்போது கருவாடுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் வாங்குவோர் இன்றி வருத்தத்தில் இருக்கிறார்கள் வியாபாரிகள். கருவாடுக்கு எங்கு பில் வாங்குவது? எங்கு விற்பது என்ற குழப்பங்களும் நீடிக்கின்றன. கருவாடுக்காக மீன்களை விற்கும்போது வரி வசூலிக்கப்படுமா? மீன்வாங்கி பதப்படுத்துபவர் வரி செலுத்தவேண்டுமா? வியாபாரம் செய்யும்போது வரி வசூல் செய்யப்படுமா? சில்லறை வியாபாரிகளிடம் வரி வசூலிக்கப்படுமா என்ற இவர்களின் கேள்விகள் நீள்கின்றன. கடலையே நம்பி இருக்கும் தங்களைப்போன்ற எளியவர்களை ஜிஎஸ்டி வரி வலைக்குள் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கருவாடுக்கு வரி விதிக்கக்கூடாது என்றும் இவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.