ஜிஎஸ்டி வரி தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய நிதித்துறை முதன்மை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜிஎஸ்டி அமலான பிறகு, பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி முறையாக செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5, 12, 18, 28 என்ற சதவிகிதங்களில் வரி வசூல் செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களிடம் போலி ரசீது கொடுத்து உணவகங்கள் ஏமாற்றுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ஜிஎஸ்டியின் நோக்கம் நிறைவேறாமல் போகும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ள மனுதாரர் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வியாபாரத்திற்கு ஆன்லைன் ரசீது கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியிருந்தார். அதனை கண்காணிக்க மாநில, மாவட்ட, மண்டல அளவில் பறக்கும் படை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய நிதித்துறை மற்றும் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.