ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மக்கள் கருத்துகேட்பு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் புதிய உத்தரவு

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மக்கள் கருத்துகேட்பு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் புதிய உத்தரவு
ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மக்கள் கருத்துகேட்பு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் புதிய உத்தரவு
Published on

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க கருத்து கேட்பு தேவையில்லை என்ற உத்தரவு குறித்து பதிலளிக்க, மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் துறை திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஏற்கெனவே, இத்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமானதாக இருந்தது. மேலும், இத்திட்டங்களுக்கான அனுமதியை மத்திய அரசுதான் வழங்க முடியும் என்றிருந்தது.

ஆனால், ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் ஹைட்ரோ கார்பன் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள அமைக்கப்படும் ஆய்வுக் கிணறுகளுக்கு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டாம் என்றும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்றும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ்குமார் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட பிரிவுக்கு எதிராகவும் இத்திருத்தம் இருப்பதால், இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய சுற்றுச்சூழல் துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com