'பேராசைக்காரர்களும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள்' - சென்னை உயர்நீதிமன்றம்

'பேராசைக்காரர்களும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள்' - சென்னை உயர்நீதிமன்றம்
'பேராசைக்காரர்களும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள்' - சென்னை உயர்நீதிமன்றம்
Published on

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால் பேராசைக்காரர்களும் மற்றும் குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

எஸ்.ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை அந்த ஊரை சேர்ந்த 9 நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், கட்டுமானங்களை உருவாக்கி, அவற்றை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தில் மின்சார வாரியம், வங்கி, தனி நபர்கள் என வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டதன் மூலம் 16 லட்ச ரூபாய் அளவிற்கு அந்த கிராமத்தினர் வருமானம் ஈட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் முடிக்கபடும் எனவும் தெரிவிக்கபட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடம் என தெரிந்தவுடன் அந்த இடத்தை வங்கி காலி செய்துவிட்டதாகவும், மற்றவர்கள் காலி செய்யாமலும், வாடகை செலுத்தாமலும் குடியிருந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதி, அரசு நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், சட்டவிரோத கட்டுமானங்களை உருவாக்கி, அவற்றை அரசு நிறுவனங்களுக்கே வாடகைக்கு விட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து அனுமதித்தால் 'பேராசைக்காரர்களும், குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள்' என நீதிபதி சுப்ரமணியம் எச்சரித்துள்ளார்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அலட்சியத்துடனும், பொறுப்பை தட்டிக்கழித்தும் செயல்பட்டுள்ளதாக அரசு துறையினர் மீது நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். வாடகைதாரர்களை காலிசெய்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கும்படியும், அரசு நிலத்திற்கு ஏற்பட்ட சேதம் மற்றும் நிதி இழப்புகளை மதிப்பீடு செய்து, அவற்றை வசூலிபதற்கான சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த பணிகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com