சென்னையில் அதிக வெளி மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சிந்தாதிரிப்பேட்டையில் வட மாநில தொழிலாளர்களிடம் காவல்துறையினர் நேற்று கலந்துரையாடினர். அப்போது, “வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்ததோடு, வெளி மாநில தொழிலாளர்களின் பட்டியல் அடிப்படையில் பணி புரியும் நிறுவனங்களிடமும் சில முக்கிய அறிவுரைகள் அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரிச்சி தெரு, இந்தியாவிலேயே மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு 3000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதோடு அண்ணா சாலையில் 30க்கும் மேற்பட்ட பெரிய உணவகங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஆட்டோ மொபைல் சர்வீஸ் கடைகள், அலங்கார பொருள் விற்பனை கடைகள், விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் இடங்கள், இனிப்பு வகைகள் விற்கும் கடைகள், கட்டுமான தொழிலாளர்கள் என மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாக சிந்தாதிரிப்பேட்டை அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்தி பேசிய வட மாநிலத் தொழிலாளர்களை தமிழ்நாட்டில் அடிப்பது போன்ற போலியான வீடியோ இந்தப் பகுதியில் உள்ள பல தொழிலாளர்கள் இடையே நேற்று முன்தினம் மிக வேகமாக பரவியது. தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் வராத நிலையிலும் இதுபோன்ற வீடியோக்கள் பரப்பப்படுவதால் ஊரில் இருந்த சொந்தங்கள் பலர் தங்களை அழைத்ததாக தொழிலாளர்கள் பலரும் வேதனை தெரிவித்து வந்தனர். குறிப்பாக, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் பலர், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலியான வீடியோ குறித்து அவர்களுடைய குடும்பத்தினரிடம் இருந்து நாள்தோறும் தொலைபேசி அழைப்புகள் வருவதாக நம்மிடையே கூறினர்.
இதைத்தொடர்ந்து, சென்னை மாநகரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பரவும் வீடியோ வதந்தியே என்ற விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சென்னை மாநகர காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில், பகுதிவாரியாக காவல்துறையினர் வெளி மாநில தொழிலாளர்களுடன் உரையாடினர். அந்தவகையில் குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய நிறுவன உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் பரப்பப்பட்டு வரும் போலியான வீடியோ குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம் எடுத்துரைத்தார்.
வேலை செய்யும் இடம் தவிர்த்து, வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களிலும் அவர்களது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பகுதிவாரியாக வட மாநில தொழிலாளர்களின் பட்டியலை சேகரித்து அதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடியோக்களை வதந்திகளை அவர்கள் நம்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதேபோன்று கிண்டி தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை துறைமுகம், புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளிலும் வெளிமாநில தொழிலாளர்களுடன் காவல் துறையினர் உரையாடினர்.