அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை முடிவடைய இருக்கும் நிலையில் இன்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியிருக்கிறது.
முன்னதாக நாளை மறுநாள் முதல் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வெயில் மற்றும் அனல் காற்றினால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. வங்கக் கடலிலிருந்து பலத்த காற்று வீசுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் மீனவர்கள் வட மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை அக்னிநட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று திருத்தணி 105.8, வேலூர் 105.44, கரூர் பரமத்தி 104.9, மதுரை விமான நிலையம் 104.3, திருச்சி, சேலம் 102.3, பாளையங்கோட்டை 102.2, மதுரை 101.4, தர்மபுரி 100.7, காரைக்கால் 100.5 பரங்கிப்பேட்டை நாமக்கல் 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.