சென்னை ஆவடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு, அண்ணாநகரில் வசித்து வந்தவர் ராஜேஷ்வரி. வயது 62. இவரது கணவர் சுப்ரமணி இறந்த பின்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். ராஜேஷ்வரியின் மகன் முருகன் அருகே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்த மூதாட்டியின் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிர் இழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த மீட்பு படையினர் ராஜேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.