“பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டே தமிழகத்தில் திமுக அரசு மழைநீர் வடிகால் பணிகளை தாமதமாக தொடங்கியது” என நடிகை குஷ்பு குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் பால் விலை மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் சென்னை அடையாறு பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி வேறாகவும், தற்போது செயல்படுத்துவது வேறாகவும் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி தருவோம் என்று கூறினீர்கள். ஆனால் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என்று மக்களை அவதிப்பட வைத்துள்ளீர்கள். அதிமுக ஆட்சியில் பால், மின் கட்டணம் உயர்ந்த போது சாலையில் இறங்கி போராடியது திமுக. இப்போது எப்படி உயர்த்தியது?
நவம்பர் மாதத்தில் மழை வரும் என்று தெரிந்தே மழைநீர் வடிகால் பணியை காலதாமதமாக தொடங்கியது ஏன்? ஆம், திட்டமிட்டே காலம் தாழ்த்தி மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மழை வந்தால் பாதியில் திட்டத்தை நிறுத்திவிட்டு சம்பாதிக்கலாம் என்றே இப்படி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தி எதிர்ப்பு என்று பேசிவரும் திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் தீபாவளியில் மட்டும் 720 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழக மக்களை திமுக அரசு மதுபோதையில் வைத்துள்ளது. மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுக தற்போது ஏன் அதனை மூடாமல் உள்ளது?
மக்களை பற்றி தமிழக முதல்வருக்கு கவலை இல்லை. திமுகவினருக்கு பணம் வந்தால் போதும் என்று உள்ளனர். தமிழக முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. பணம் வரவில்லை என்று மறுப்பு சொல்ல முடியாது. இதை கூறியதற்காக என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை” என்று பேசினார்.
மேலும் பேசுகையில், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. திமுக நிர்வாகி, மேடையிலேயே பெண்கள் குறித்து அவதூறாக பேசியபோது அதனை அமைச்சர் மனோ தங்கராஜ் ரசித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் பொன்முடி பெண்கள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிப்பதை, ஓசி பஸ் பயணம் என்று அவதூறாக பேசியுள்ளார். ஆனால், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கட்சி ரீதியாககூட எடுக்கப்படவில்லை. தமிழகத்தின் மகள் என்ற வகையில் தமிழக முதல்வரை கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது. கேள்வி கேட்பேன்” என்று தெரிவித்தார்.