தருமபுரியில் தரமற்ற உணவினை மாணவர்களுக்கு வழங்கியதால் சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் முறைகேடுகள் நடைபெறுவதாக சார் ஆட்சியர் மு.பிரதாப்புக்கு புகார்கள் வந்தன. அத்துடன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பிரகாசம், அரூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு முட்டை வழங்கும் பணியை, வேறொருவரின் பெயரில் எடுத்துக்கொண்டு, மலைக் கிராமப் பகுதிகளுக்கு வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே முட்டை வழங்குவதாகவும் புகார் வந்துள்ளது.
இந்நிலையில் இன்று அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சார் ஆட்சியர் மு.பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவைச் சாப்பிட்டும் பார்த்தார். அப்போது மாணவிகளுக்கு வழங்கும் மதிய உணவு தரமற்றதாகவும், அளவு குறைந்து இருந்ததும் தெரியவந்தது.
மேலும் மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொருட்களின் இருப்பு பதிவேட்டில் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் கணக்குகள் முறையாகப் பராமரிக்காமல் குளறுபடியாக இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தரமற்ற சத்துணவு, பதிவேடு முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களுக்காகச் சத்துணவு அமைப்பாளர் பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.