சொந்த ஊர்களுக்கு செல்ல நினைக்கும் மக்களுக்கு கட்டணம் இல்லாமல் அதிகப் பேருந்துகளை அரசு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். ஆனால் போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்துகள் நாளை மாலை வரை இயங்கும் எனவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் மக்கள் பேருந்துகளில் இடம்பிடிக்க போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “கொரோனா வைரஸ் அச்சம், அரசு அறிவித்துள்ள 144 தடை ஆகியவை இருக்கும் இச்சூழலில் வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை சாலையில் நிறுத்தி சண்டையிட வைத்திருக்கிறது அரசு.
பேருந்துகளைக் குறைத்துவிட்டால் மக்கள் எப்படி தங்கள் ஊருக்குச் செல்வார்கள் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூடவா அரசுக்கு இல்லை ? உடனடியாக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும். கட்டணம் இல்லாமல் இலவசமாக அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும்!” என வலியுறுத்தியுள்ளார்.