சென்னை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஸ்டிரைக் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய தலைமுறையிடம் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், ஸ்டிரைக்கில் ஈடுபடுள்ள அரசு மருத்துவர்களுடன் முறையாக பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார். மருத்துவம் என்பது சேவைத்துறை என்றும், அதில் மருத்துவர்கள் முக்கிய அங்கமாக உள்ளனர் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதனிடையே மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.